குற்றாலம் சாரல் திருவிழாவில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம்பெற்றனர். குற்றாலம் சாரல்திருவிழாவின் நிறைவு விழா அன்று மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது. ஐந்தருவி முதல் குற்றாலம் வரையிலும், குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் முதல் காசிமேஜர்புரம் வரையிலும் இரண்டு இடங்களில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இப்போட்டியை பயிற்சிஉதவி ஆட்சியர் சுகபுத்தரா துவக்கி வைத்தார். குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் முதலிடம் பெற்றனர். போட்டிகளில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் பாரத் முதலிடமும், முக்கூடல் தீபா மெட்ரிக் பள்ளி மாணவர் செல்வவசந்த் இரண்டாமிடமும், இப்பள்ளி மாணவர் கைலாசநாதர் மூன்றாமிடமும் பெற்றனர். பள்ளி மாணவியர்பிரிவில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி மணிகாஸ்ரீ முதலிடமும், செந்தட்டியாபுரம் பழனியப்பா பள்ளி மாணவி தவமணி இரண்டாமிடமும் பெற்றனர். கல்லூரி மாணவியர் பிரிவில் குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரி மாணவிகள் பிரியா, பேச்சியம்மாள், இந்திரா ஆகியோர் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது இடமும் பெற்றனர். கல்லூரி மாணவர் பிரிவில் இலஞ்சி திருப்பதி அகாடமி மாணவர்கள் சக்திகுமார், பெருமாள்ராஜா, கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது இடம் பெற்றனர். ஆண்கள் பொதுப் பிரிவில் பாளையங்கோட்டை இஸ்ரேல் ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த சேதுராமன், அந்தோணிடார்வின், இலஞ்சி திருப்பதி அகாடமி மாரிச்செல்வம் ஆகியோர் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது இடமும் பெற்றனர். பொது பெண்கள் பிரிவில் இலஞ்சி திருப்பதி அகாடமியைச் சேர்ந்த தனநித்யா, சண்முககனி ஆகியோர் முறையே முதல், இரண்டாமிடமும் பெற்றனர். சிறப்பு பிரிவில் தென்காசி அரசு ஐ.டி.ஐ.மாணவர் அஜீத்குமார் முதலிடமும், செங்கோட்டை பால்ராஜ் இரண்டாமிடமும், சங்கரன்கோவில் முத்துப்பாண்டி மூன்றாமிடமும் பெற்றனர்.போட்டியின் நடுவர்களாக சத்யா, பிரின்ஸ் ஆகியோர் செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இரவில் நடைபெற்ற சாரல் திருவிழாவின் நிறைவு விழாவில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, மாவட்டஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.