24 மணி நேரம் நடைபெற்ற கணினி ஆன்லைன் பட்டறையில் தென்காசி குத்துக்கல் வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.
ஜியுவிஐ எனும் தகுதியான தொழிற்நுட்ப நிறுவனம், என்இஏடி எனும் தேசிய கல்விக்கான கற்பித்தல் நிறுவனம் இணைந்து கணினி ஆன்லைன் பட்டறை நடத்தியது. கின்னஸ் உலக சாதனைக்காக இந்தியா 1. 0 என்ற தலைப்பில் தொடர்ந்து மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 24 மணி நேரம் நடைபெற்ற இந்த கணினி பட்டறையில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த பட்டறையில் ஏஐ குறியீடு குறித்த கின்னஸ் உலக சாதனைக்கு “பைத்தானைப்” பயன்படுத்தி முக அங்கீகாரப் பயன்பாட்டை உருவாக்குவது குறித்த இலவச ஆன்லைன் பயிற்சி நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து 3 மணி நேரத்திற்கு ஒரு தேர்வு நடைபெற்றது.
ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகர் தி. மிராக்ளின் பால்சுசி தலைமையில் பள்ளி முதல்வர் எஸ். சவுமியா, ஆசிரியர்கள் பி. சிவகுமரன், பி. சிவசுப்பிரமணியன், திவ்யா லெட்சுமி, ஜெயபொற்செல்வி,
12ம் வகுப்பு மாணவர்கள் சஞ்சய், பவதாரணி பால்துரை, 11ம் வகுப்பு மாணவர்கள் அஜய்குமார், ஸ்ரீராம், ஷர்மிளா, செய்யது அலி, ஹரிணி முத்துராஜ், முகமது தவுபிக், 10ம் வகுப்பு மாணவர்; கணேஷ்குமார், 9ம் வகுப்பு மாணவர் நரேன் கிருஷ்ணபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு கணினி ஆன்லைன் பட்டறையில் கின்னஸ் உலக சாதனை படைத்தனர்.
இவர்களுக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. சாதனை படைத்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகளை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் பாராட்டினர்.