தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகள் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தென்காசி புதிய பஸ்ஸ்டாண்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் பயணிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான கே. திருமலை தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியையும், மரக்கன்றுகள் வழங்கும் பணியையும் துவக்கி வைத்தார்.
பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி இயக்குநர் வழக்கறிஞர் தி. மிராக்ளின் பால் சுசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தேவையான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பயணிகள், ஓட்டுநர், நடத்துநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை மாணவ, மாணவிகள், ஆசிரிய, ஆசிரியைகள் எடுத்துக் கொண்டனர்.