மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர் பாரத்தை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் பாராட்டினார்.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேசன் சார்பில் 35வது மாநில அளவிலான தடகளப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கு அசோசியேசன் மாநில தலைவர் வால்டர் தேவாரம், மாநில செயலாளர் லதா ஆகியோர் தலைமை தாங்கினர்.
இப்போட்டியில் 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.எஸ்.பாரத் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இவருக்கு அசோசியேசன் தலைவர் வால்டர் தேவாரம் சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினார். இம்மாணவர் பாரத் ஆந்திர மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சாதனை படைத்த மாணவர் பாரத்தை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞருமான திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, சர்வதேச பயிற்சியாளர் நிகில் சிற்றரசு ஆகியோர் உடனிருந்தனர்.